Friday, 2 September 2016

நேற்றைய நிஜங்கள்


பலா மரத்தில் வாப்பா கட்டித் தந்த ஊஞ்சல்
அதில் இடம் பிடிப்பதற்காய் வரும் உலகப்போர்,
சைக்கிள் ஓட்டப்பழகிய முயற்சியில் வெற்றிகண்ட போது
முகத்தில் ஏற்பட்ட தழும்பும் விளங்கிடாமல் வந்த பூரிப்பு

இரண்டு சிரட்டை எடுத்து கவனமாய் துளையிட்டு
கயிறு கட்டி தராசு அமைத்து வியாபரம் செய்து விளையாடிய நாட்கள்,
புலமைப்பரிசில் பரீட்சை வைரஸ் என்னையும் தொற்றிக்கொள்ள
முடங்கிப்போன என் விளையாட்டுக்கள்
பரீட்சை முடிந்த்தும்  மீண்டும் விழித்துக்கொண்ட பழைய சாகசங்கள்

செவ்வரத்தை மரத்தின் இலைகளை எடுத்து தண்ணீரில் கலந்து
கருங்கல்லில் தேய்த்து விளையாடிய விடுமுறை நாட்கள்,
மயிலிறகை புத்தகத்தில் வைத்து குட்டி போடும் என்று கணாக்
கண்ட பொழுதுகள்,
ஐந்தாறு விளாம்பழமும் டொபியும் வைத்து நோம்புக்கடை என்ற பெயரில் அந்திசாயும் வரை தவமிருந்த அந்தப் பொழுதுகள்
மீண்டும் வேண்டும் என உணர்கின்றேன்

சிறுவயதில் சுற்றுலா போவதென்றால் கண்களை அகல விரித்து
மீண்டும் மீண்டும் உண்ணிப்பாய் அவதானித்து காட்சிகளை அப்படியே பதிந்து கொண்ட நாட்கள் மறைந்து
இன்றைய சுற்றுலாக்களில் எல்லாம் இயற்கையை  கமராவில் பதிந்து கொள்ளும் அவசரம் மட்டும் தொற்றிக்கொண்டது என்னையும்

சித்திரம் சாத்தியமாய் வந்திடாது எனக்கு
வரையப் பழகிட வேண்டும் என்ற அவாவில்
டியுஷன் வகுப்புப் போக
வீட்டில் இருந்த சிறுசுகள் எல்லாம் கலர் பெட்டியும் பென்சிலுமாய்
எங்களை பின்தொடர முடிவுக்கு வந்தது அந்த வகுப்பு
நினைக்கையில் இன்றும் சிரித்துக் கொள்கின்றேன்

வீட்டின் முன் இருக்கும் வயல் தாண்டி ஒரு சலசலக்கும் நீரோடை
பார்க்கும் இடமெல்லாம் பச்சை மட்டுமான செழிப்பு
நீரோடை தாண்டி ஒரு சிறு பீலி,
அந்த நாட்களில் உம்மாவோடு கை கோர்த்து
கவனமாய் வரம்பில் கால் வைத்து ஓடையை கடந்து
பீலியில் தலை வைக்கையில் தேகமெல்லாம் நடுநடு நடுங்கும்
பீலி இருந்த இடம் தெரியாமல் இன்று மறைந்தே போய்விட்டது

என் எண்ணங்களுக்கு எல்லாம் சிறகு முளைத்திருந்த அந் நாட்களில்
பூமி பரந்து விரிந்திருப்பதாய் உணர்ந்தேன்
இன்றோ  என் கால்களில் சக்கரங்கள் பூட்டப்பட்டு
இயந்திரமும் இலத்திரனிவியலும் கலந்த தொழில்நுட்ப உலகில்
எங்கோ ஒரு மூலையில் சஞ்சரிப்பதாய் உணர்கின்றேன்.


1 comment:

  1. Waaaaaw... Amazing poem. You took me to my childhood. Thanks...

    ReplyDelete